Tuesday, January 5, 2016

பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்.. சாட்டையை கையில் எடுங்கள்!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (05/1/2016 Issue)

 
பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்
சாட்டையை கையில் எடுங்கள்!
-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
அடுத்த கல்வியாண்டுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல கல்விக்கூடத்தில் சேர்க்க இப்பொழுதே  பெற்றோர்கள் படையெடுக்கும் நேரமிது. நம் நாட்டில் பள்ளிகூடங்களுக்கு பஞ்சமில்லை. கல்விக்கூடம் என்ற தொழில் சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் கவர்ச்சிகரமான தொழில் என்றாகி போனது நம் சமூகத்திற்கு சாபமே. கல்வி, ஆரோக்கியம் போன்றவை அரசிடம் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைப்பட்ட காலத்தில் நாம் உணர்ந்திருப்போம், இதில் நாம் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.
இந்நேரத்தில் பெற்றோர் ஆகிய நாம் முதலில் பள்ளியின் அங்கீகாரத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கடந்த ஆண்டுகளின் தகவல்களை ஆராய்ந்தால் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. இந்நிலை இன்றும் தொடர்கிறது. ஆகவே நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். நம் அறியாமையை மற்றவர்கள் முதலெடுப்பதை தடுப்போம்.
பல்வேறு கல்வி முறைகள் சமசீர் கல்வி, மெட்ரிக்குலேஷன், CBSE, ICSE என்று பள்ளிகள் செயல்படுகிறது. மெட்ரிக்குலேஷன் போன்றவை எல்லாம் சமசீர் கல்விமுறையின் கீழ் கொண்டுவந்தாலும் இன்றும் அவை மெட்ரிகுலேஷன் என்ற அடையாளத்துடன் செயல்படுவதை காணலாம். மக்களுக்கு தெளிவான வழிக்காட்டுதல் கிடைப்பதில் சிக்கல் உள்ளதை ஏற்றுகொள்ளவேண்டியுள்ளது. இச்சிக்கலுக்கு முக்கிய காரணம் பல கல்விக்கூடங்கள் அரசியல்வாதிகளிடமும், அரசியல் செல்வாக்குள்ள செல்வந்தர்களிடமும் உள்ளதை மறுக்க முடியாது.  
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் உணர்திருப்பர். அந்த நம்பிக்கையில் இணையத்தில் வேண்டிய விவரத்தை அறியலாம் என்று முயன்றதில்
http://www.tn.gov.in/schooleducation/ ; http://tnmatricschools.com/ ; http://cbseaff.nic.in/cbse_aff/schdir_Report/userview.aspx ; http://www.cisce.org/Locate.aspx  என்றவை தேடுதலில் கிடைத்தது. இதைக்கொண்டு பள்ளியின் அங்கீகாரத்தை அறியமுடியும், அறியமுடியவேண்டும்...
CBSE, ICSE என்ற தளங்களில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும்  கல்விக்கூடத்தின் அங்கீகாரத்தை பற்றி அறிவது கடினம் என்பதை தேடிப்பார்த்தால் உணர்ந்துக்கொள்ளலாம்.
அகவே, மேற்கூறிய வகையில் பள்ளியின் நிலை என்ன என்பதை அறிய முடியும், அப்படி முடியாத நிலையில் நம் அரசாங்கம் அறிவித்துள்ள ஈ-சேவை மையங்களை நாடி அங்கீகார எண் கேட்கதொடங்கினால் இப்போழுது நாம் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பதை சம்பந்தபட்ட துரை அதிகாரிகள் தெரிந்துகொள்ள நேரிடும்.
அடுத்தது நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது பள்ளிகள் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதா என்பதே. அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில எப்படி நம் பிள்ளைகள் விளையாடும், கற்றுகொள்ளும் என்பதை யோசிக்க வேண்டும். விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், போதுமான கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் கொண்ட ஆரோகியமான சூழல் அவசியம்.
பின்னர் பிள்ளைகள், ஆசிரியர் விகிதாசாரம் பற்றியும் யோசிக்க வேண்டும். கூடுதல் பிள்ளைகளுக்கு ஒரே ஆசிரியர் எப்படி கவனம் செலுத்தி படிப்பிக்க முடியும். இங்கு ஆசிரியர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா என்று கவனம் கொள்ளவேண்டும். அதுவும் ஆரம்ப நிலை மற்றும் நர்சரி பள்ளிகள் பயிற்சி பெறாத நபர்களைகொண்டு நடப்பது சகஜம்.
ஒவ்வொரு பள்ளியிலும் பாலியல் தொல்லை மற்றும் அடாவடித்தனத்தை (bullyism) எதிர்கொள்ள செயல்படும் குழு உண்டாக வேண்டும். ஆகவே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பொறுபேற்க வேண்டிய அவசியம் நேரிடும். பல பள்ளிகளில் பெயரளவில் இவ்வாறு ஒன்று செயல்படாமல் உள்ளது. அந்த அமைப்பில் பெற்றோர் பிதிநிதிகளும் இருப்பது அவசியம்.
இந்நிலையில் பெற்றோகளாகிய நாம் என்ன செய்யலாம் என்று பாப்போம். வலைத்தளத்தில் தங்களின் அங்கீகார எண் தெரிவித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் விண்ணப்ப படிவம் வாங்கும் பொது அங்கீகார தகவல்களை கேட்பது தவறில்லை, அது நம் உரிமை, பணம் செலுத்தி படிக்க வைப்பவர்கள் நாம் என்பதை நினைவில் நிறுத்தவும். இப்படி கேட்கும் ஓரிருவரை பள்ளி நிர்வாகம் உதாசீனப்படுத்தலாம், ஆனால் ஒவ்வொருவரும் கேட்கதொடங்கினால் பதில் கூறவேண்டிய நிலைக்கு தள்ளபடுவர்.
பல பிரபல தனியார் பள்ளிகள் பெற்றோரை துச்சமாக மதிக்கும் போக்கும் நிலவுகிறது. பெற்றோர்  சிந்திக்க வேண்டும், இவர்கள் எப்படி நம் பிள்ளைகளுக்கு நல்லது செய்வர், மற்றவரை மதிக்க வேண்டிய பண்பை இவர்களைப் பார்த்து பிள்ளைகள் படித்தால் அது எப்படி இருக்கும்? பிள்ளைகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள்? இன்றைய அவலநிலையில் பள்ளி வளாகத்திலேயே பிள்ளைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவதும், பள்ளி பேருந்து வாகனமே பிஞ்சு பிள்ளைகளுக்கு எமனாக இருப்பதைப்பதை பற்றி கேள்வி எழுந்தால் அதற்கும் தங்களுக்கோ தங்கள் பள்ளிகளுக்கோ பொறுப்பில்லை என்று தப்பிக்கும் மனப்பான்மை கொண்ட நிர்வாகமே ஏராளம். எங்கும் விதிவிலக்குகள் உண்டு..அவை இங்கும் சிறந்த கல்விக்கூடங்களாக பொறுப்புடன் செயல்படுவதை காணலாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை இதுபோன்ற தனியார் பள்ளிகளில் சேர்த்தால்தான் அவர்களுக்கு வருமானம், இல்லையேல்? ஆகவே மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே போதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இன்றைய காலத்தில் அரசு சில மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியம். பள்ளிகள் அடிப்படை வசதிகள் உடையதாக இருக்கவேண்டும், அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு சொந்தமான வலைதளமும், அங்கு பள்ளியின் அங்கீகார எண், ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்விக் கட்டணம், நூலகம், மற்ற அடிப்படை வசதிகள் என்ன என்பதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆகவே, தவறான தகவல்களை தர முடியாது, அது பின்னர் சட்டப் பிரச்சனைக்கு கொண்டு செல்லும். அதேபோல் விண்ணப்ப படிவங்களில் அங்கீகார எண் மற்றும் அதன் காலாவதி காலம், நிரந்தனமானதா அல்லது குறிப்பிட்ட காலத்தில் புதிப்பிக்க வேண்டியதா (வாலிடிட்டி) என்பதையும் கட்டாயம் அறிவிக்கவேண்டும் என்று கொண்டுவரலாம்.
சில CBSE பள்ளிகள் தங்களில் வலைத்தளத்தில் மேற்கூறிய தகவல்களை தெளிவாக தெரிவித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலே பல அடிப்படை விஷயங்களை சரியாகிவிடும்.
இதையெல்லாம் மீறி பல விஷயங்கள் உள்ளன. கல்வி என்பது என்ன என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெறும் பாடங்களை படித்து பெரும் மதிபெண்ணிலா அல்லது அறிவை, திறமையை கூர்தீட்டி சமூக சிந்தனையுள்ள எதிர்கால பிரஜைகளை உருவாக்குவதிலா?
நமக்கு எது தேவை என்ற தெளிவு வேண்டும், அதை நடைமுறை படுத்த எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் நாம் பங்குபெறுவதும் அவசியம். நம் கடமையை சரிவர செய்வோம், ஒன்றுபட்ட மக்களின் குரலுக்கு சக்தி உண்டு என்பதை எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றத்தில் காண்போம் என்ற நம்பிகையில்......  
நன்றி
ராணி வாராந்தரி