Wednesday, July 27, 2016

தாய்ப்பால் இருக்க ... புட்டிப்பால் எதுக்கு?


ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (31/7/2016 Issue)




தாய்ப்பால் இருக்க ... புட்டிப்பால் எதுக்கு?

-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


சுபத்ரா வெளிநாட்டில் இருந்து தன் குடும்பத்துடன் விடுமுறைக்குத் தாய்நாட்டிற்கு வந்திருந்தாள். தன் சிறுவயது தோழியைக் காண சென்ற போது...

வா வா, எப்படி இருக்க? அட உன்னோட பொண்ணா? வா குட்டிம்மா...” என்று ஒரு வயது நிரம்பிய குழந்தையை வாங்கிக்கொண்டே தோழியை வரவேற்றாள் வசந்தி.

உன்னோட பொண்ண பாக்க வந்தா எங்க ஆளையே காணோம்? தூங்கறாளா?” என்று 5 மாத குழந்தையைப் பற்றி கேட்ட சுபத்ராவிடம்ஆமாம். ஒரே அழுக.. வயத்து வலி போல.. மருந்து குடிச்சிட்டு இப்போ கொஞ்சம் முன்ன தான் தூங்க ஆரம்பிச்சா.” என்று கூறிக்கொண்டே குடிப்பதற்கு டீயும், சுபத்ராவின் மகளுக்குக் குடிக்க பால் வேண்டாம் என்றவுடன் பிஸ்கட் கொண்டு வந்தாள்.

அப்புறம் சொல்லு. எப்படி இருக்க? ரொம்ப வருஷம் ஆச்சு நேருல பாத்து. டெலிவரிக்கும் நீ இங்க வரலன்னு உங்க அம்மா சொன்னாங்க.” என்று பேச்சு நீண்டுகொண்டே சென்றது.

வசந்தியின் குழந்தை எழுந்ததும், குழந்தைக்குப் பால் கலக்க வேண்டி வசந்தி எழுந்தாள். “என்னடி இன்னும் ஆறு மாசம் கூட முடியல அதுக்குள்ளே டின் புட் தரஎன்று கேட்டாள் சுபத்ரா.

ஆமாம்ப்பா எனக்கு பாலே வரல. அதுவும் இல்லம சிசேரியன் வேறையா, உடனே குழந்தைக்கு பால் குடுக்க முடியாம இருந்ததால முதல் ரெண்டு நாள் பால் பவுடர் தான். அப்புறம் தான் என்னோட பால் குடிக்க ஆரம்பிச்சா. அதுவும் ரொம்ப கிடைக்காமை குழந்தை கஷ்டப்படுவா. அதுனால கொஞ்சம் வேற பால் குடிக்க ஆரம்பிச்சா. இப்போ எனக்கும் சுத்தமா பாலே கிடைக்கறது இல்ல.” என்று நீண்ட விளக்கம் கொடுத்தபடி குழந்தைக்குப் பால் கலந்து கொடுக்க துடங்கினாள்.

சுபத்ராவின் எண்ணம் எல்லாம் தான் தாய்மை அடைந்த காலத்தை நோக்கிப் பயணித்தது. தான் சென்ற அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை உண்டானதை உறுதி செய்தவுடன் மருத்துவரைக் காண செல்லும் முன்னர் முதலில் தாய்ப்பால் மையத்திற்கே அனுப்பினர். அங்கு தாய்ப்பாலின் சிறப்பு, தாய் சேய் உறவை எவ்வாறு அது இணைக்கும், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியமான விஷயங்கள், உணவு முறை என்று பல விஷயங்களை நன்கு புரிந்துகொண்ட பின்பேதாய்ப்பால் பற்றிய வகுப்பில் பங்கெடுத்தாள்என்று சான்றுடனே மருத்துவரைக் காண அனுமதிக்கப்பட்டாள்.

சுபத்ராவிற்கும் சிசேரியன் தான், முதுகு தண்டில் மயக்க மருந்து தந்ததால் சுய நினைவுடனே இருந்தாள். குழந்தை பிறந்தவுடன் தாய் மற்றும் சேயின் நலனைக் கண்காணிக்க ஒருமணிநேரம் வேறு அறைக்கு மாற்றப்பட்டாள். அங்கு முதல் அரைமணி நேரத்திலேயே தாய்ப்பால் தருவதைத் துணைபுரிந்து உறுதிசெய்தும், சரியாகத் தரப்படுகிறதா என்று உறுதிப்படுத்தியது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்ற சுபத்ராவின் சிந்தனை ஓட்டத்தை வசந்தியின் குரல் நிறுத்தியது.

என்ன கேட்ட?” – சுபத்ரா.

உன்னோடா பொண்ணுக்கு குடிக்க என்ன தரட்டும்?” என்ற வசந்திக்கு

இப்போ ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் நேரத்துல அவளுக்கு என்னோட பால் தந்துடுவேன். அதுவே போதும்.”

இன்னும் நீ தாய்ப்பால் தரியா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் வசந்தி.

ஆமாம், 2 வயசு வரைக்கும் குடுக்கலாம்னு இருக்கிறேன். நானே உன்ன கேக்கணும்னு இருந்தேன்.... உனக்கு வேற ஹெல்த் ப்ராப்ளம்னு ஒண்ணும் இல்லையே?”

இல்ல, ஏன் கேக்கற சுபத்ரா?”

அப்போ நீயேன் தாய்ப்பால் கிடைக்கலன்னு சொல்லுற? தாய்ப்பால் தரணும்னு மனசு வெச்சா கண்டிப்பா தர முடியும். இது மனசும் சம்பந்தப்பட்ட விஷயம். ஆரோக்யமான உணவும், மனசும் இருந்தா போதும். குழந்தைக்குப் பால் பத்தல அது இதுன்னு காரணமே வேண்டாம். கடவுளா குழந்தைக்கு தரும் அமுதம் தான் தாய்ப்பால். இது குழந்தையோட உடல் மற்றும் மனநலத்திற்கு ரொம்ப முக்கியம். வெகு சிலருக்கு தான் தாய்ப்பால் குடுக்க முடியாம போகும்.

நீ சொல்லுறது புரியுது சுபத்ரா. ஆனா, என்ன பண்ண? பால் கிடைக்கல. சிசேரியன் முடிஞ்சதும் என்னால ஒக்காந்து பால் குடுக்க முடியல.” என்று வருந்தினாள் வசந்தி.

என்னக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியம் அப்படின்னு எல்லாருக்குமே தெரியும். வெளிநாட்டிலும் நம் இந்திய மருத்துவர்கள் பேரும் புகழும் பெற்றவர்கள் இருக்காங்க. நம் இந்தியாவிலும் சிறந்த மருத்துவ சேவை கிடைக்குதுன்னு பல தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டினர் வந்துபோறாங்க...” என்று அங்கிருந்த பிஸ்கெட்டை கொறித்துக்கொண்டே பேச்சை தொடர்ந்தாள்

தாய்ப்பாலின் முக்கியத்துவமும், வேலைக்குப் போகும் பெண்கள் தாய்ப்பாலை எப்படிச் சேமித்து குழந்தைக்குத் தரவேண்டும் அப்படியென்று உலகம் மொத்தமும் விழிப்புணர்வை ஏற்படுத்த (WHO) முனைகிறது. அப்படி இருக்கும்போது உடலில் வேறு எந்த பிரச்னையும் இல்லாத உன்ன மாதிரி நார்மல் லேடீஸ்கிட்ட முடியலைனாலும் உதவிபுரிந்து தாய்ப்பாலை கொடுக்க வைக்காம எதுக்கு டின் பால் தர சொல்லணும்? அட்லீஸ்ட் பாலைப் பிழிந்து புகட்டவாது சொல்லி இருக்கணுமே.” என்ற ஆதங்கத்தோடு தொடர்ந்தாள்

இதை எல்லாம் பார்க்கும்போது நம் நாடு எப்படிப் பிறந்த குழந்தைய கூட ஒரு நுகர்வோரா பாக்குதுன்னு வேதனையா இருக்கு. டாக்டர் என்பவர கடவுள் மாதிரி பார்க்கும் நாடு நம் நாடு. அதுனால அவங்க ரெகமண்ட் செய்யுற எந்த ப்ரண்ட் மருந்தும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட எது ஒண்ணையும் கண்ணை மூடிக்கிட்டு கைல காசு இல்லைனாலும் கடனாவது வாங்கி செலவழிச்சி வாங்கிடும் மக்கள் இருக்கிற வரை பன்னாட்டு நிறுவனங்கள் விதவிதமான ரூபத்துல கல்லா கட்டுவாங்க. இதுல உன்னமாதிரி ஆளுங்க பால் பவுடரையும் வாங்குவாங்க.

               “...எனக்கு முன்ன படிச்ச விஷயம் தான் ஞாபகம் வருது...நைஜீரியால ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பிறந்தது முதல் நான்கு நாட்கள் வீட்டிற்கு செல்லும் வரை இலவசமா மாற்றுப்பாலை தந்து பழக்கிடுவாங்க, அந்த தாயும் வீட்டிற்கு போகும்போது கையில் இலவசமாக கிடைத்த பால் பவுடருடன் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இப்படி வேறு பாலுக்கு பழக்கப்பட்ட குழந்தை தாய்ப்பாலின் ருசிக்கு விருப்பம் காட்டாது, இதன் தொடர்ச்சியா குழந்தை தாய்ப்பாலை குடிக்காம இருப்பதும், தாயிற்கு பால் சுரப்பு குறைவதும் சூழற்ச்சியாகிவிடும். போற போக்க பாத்தா நம் நாட்டிலும் மாற்றுப்பாலை தரவேண்டிய நிர்பந்தத்தில் நம் மக்களை அழைத்துச்சென்று விடுவார்கள் போல் உள்ளது. நல்ல மருத்துவர்கள் விதிவிலக்கு....” என்ற சுபத்ராவின் ஆதங்கத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது.
--


v  வேறு எந்த ஆரோக்கிய பிரச்சினையும் இல்லாத பெண்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.

v  தாய்ப்பால் சுரந்துகொண்டே இருக்கும் ஜீவநதி. ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் குழந்தைக்கு பால் தரவேண்டும் என்ற மனநிலையும் மிகவும் முக்கிய காரணி.

v  குழந்தை தாய்ப்பாலை குடிக்கக் குடிக்க பால் சுரபிகள் சுரந்துகொண்டே இருக்கும். ஆகவே தொடர்ந்து தாய்ப்பால் தரவேண்டும், இல்லையேல் பால் சுரக்கும் தன்மை குறைந்து நின்றுவிடும்.

v  தாய்ப்பால் கொடுக்கும் முறையையும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதுவும் ஒரு கலையே! இதை வெளிப்படையாகக் கேட்க ஏன் தயங்க வேண்டும். “என் குழந்தையின் ஆரோக்கியம் எனக்கு முக்கியம், தெரியாததைக் கேட்டு தெரிந்துகொள்வதில் என்ன தவறு?” என்ற மனப்பான்மை முக்கியம்.

v  பிரசவம் பார்க்க வந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரும், செவிலியரும் தெரியாதை கற்றுத்தரத் தயங்க மாட்டார்கள். அவ்வாறு இல்லை என்று தோன்றினால் நாமே கேட்டு தெரிந்துக்கொள்வதில் என்ன தவறு? அது நம் உரிமை. தாய்ப்பால் என்பது பிறந்த சிசுவின் உரிமை...

v  குழந்தைக்கு என்று பிரத்தேயகமாக வரும் உணவு வகைகள் எவ்வகையில் நம் பாரம்பரிய உணவில் இருந்து வேறுபட்டுச் சிறந்தது என்று சிந்திக்க தொடங்கினாலே பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வணிகம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை குறைந்து, நாளாவட்டத்தில் நின்றுவிடும்.

v  என்னால் / நம்மால் முடியும் என்று நினைத்தால் நேரமின்மை, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் என்ன செய்ய முடியும் என்று சொல்லப்படும் காரணங்கள் நீர்த்துப்போகும்.

v  இன்று விற்கும் விலைவாசியில் எல்லாப் பொருளின் விளையுமே விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறதை மறுக்க முடியாது. அதுவும் குழந்தைக்கு என்று வரும் பால் பவுடர் முதல் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் கண்டிப்பாக ஹெல்த் ட்ரின்க் தரவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி வளர்த்து விட்ட அரசு, ஊடக புண்ணியவான்களால் மேன்மேலும் அதிக விலைகொடுத்து குழந்தைக்காக வாங்கும் பெற்றோர்களின் நிலையை எண்ணி யார் கவலைப்பட போகின்றனர்.

v  பொருளாதார நிலையில் பின்னில் இருப்பவர்கள் விளைக்கூடுதலான பாலை வாங்கி தரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் பலர் அதில் குறிப்பிட்ட அளவு தராமல் இன்னும் ஒரு சில நாட்கள் கூடுதலாக தரவேண்டி அளவை குறைப்பதால் அக்குழந்தை ஊட்டச்சத்து குறைந்து அவதிப்படும் (Malnutrition)

v  குழந்தைக்குத் தரும் டின் உணவுகள் சரியான முறையில் கையாளவில்லை என்றால் அதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டும். இதனால் மீண்டும், உடல், மனம் சார்ந்த வருத்தம் மட்டுமன்றி பொருளாதார சுமையும் கூடும்.

v  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மாற்று முதல் சோப்பு, லோஷன், கிரீம், முதற்கொண்டு எல்லாவற்றையும்கொழுத்த இந்தியன் மார்கெட்என்ற சந்தையில் பணம் பார்க்கவும் தேவையில்லாத  குப்பையை கொட்டவும் நாம் இடம் கொடுக்க வேண்டுமா?

v  பெயர் பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பொருளால் வேறொரு நாட்டில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சட்டப் போராட்டத்தில் அந்த நிறுவனம் நஷ்ட ஈடாகப் பெரிய தொகையைக் கட்டியதை நம் ஊடக ஜாம்பவான்கள் நம் மக்களிடம் தெரிவிக்க வில்லை.. தெரிவித்தாலும் அது ஒரு பெட்டி செய்தியே!

v  நம் ஆரோக்கியம் நம் கையில். விளம்பரங்களை கண்ணைமூடிக்கொண்டு நம்ப வேண்டாம், அது வெறும் விளம்பரமே!

v  நைஜீரியாவில் நடந்தது போல் இங்கும் இலவசத்திற்கு மயங்கிய மக்களை வேறு ரூபத்தில் ‘இலவசம்’ என்று பன்னாட்டு நிறுவனங்கள் இழுத்து செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அதற்கு நம் மக்களும் மயங்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டுதல் உண்டு....

v  சிந்தித்து கேள்வி கேட்டக தொடங்கினாலே பல நல்ல மாற்றங்கள் தொடங்கும்... சிந்திப்போமாக!!


நன்றி
ராணி வாராந்தரி