Thursday, February 18, 2016

போலிகளை நம்பாதீர்! கண்ணீரில் மிதக்காதீர்!!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (21/2/2016 Issue)
 
 
 
 
 
 
வெளிநாட்டுப் பயணம்
   போலிகளை நம்பாதீர்!
கண்ணீரில் மிதக்காதீர்!!
-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் செல்பவர்கள் இல்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டூம். அரபு நாடுகளில் வீட்டுவேலை மற்றும் கட்டிட தொழிலாளர் போன்ற அடிமட்ட வேலைக்கு சென்றேனும் தங்கள் குடும்பத்தை காக்கவேண்டிய சமூக பொருளாதார சூழல் உள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சமீபத்தில் வீட்டு வேலைக்கு என்று சென்ற கஸ்தூரி என்பவர் சவுதி அரேபியாவில் இருந்து வந்த நிலையை எல்லோரும் அறியலாம். இது ஒரு கஸ்தூரியை பற்றியது அல்ல.. நம் கவனத்திற்கு வராத பலாயிரம் ஆண், பெண் என்ற பேதமின்றி கஸ்தூரி போல் கனவு மெய்படாமல் இனி கனவே கனவாகி போன நிலையில் திரும்பி வந்தவர்கள் பற்றியது. ஏன் இந்த நிலை? இதை களைய என்ன செய்ய வேண்டும் என்ற அலசலில் ஓர் பார்வை...... 
முதலில் நாம் இவர்களின் நிலையை பார்த்தால் பெரும்பான்மை வீட்டு வேலைக்கு என்று வருபவர்கள் காலை முதல் இரவு வரை பணிசெய்ய வேண்டியுள்ளது. அதேபோல் கட்டிட தொழிலாளர்களாக வரும் ஆண்களும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையை பற்றி முன்பே அறிந்து வருபவர்களும் அறியாமல் வருபவர்களும் ஏராளம். பெரும்பான்மையாக இவர்கள் தங்கள் குடும்பத்தைக் காக்கவும், நம் நாட்டில் வாங்கிய கடனை (அதிக வட்டிக்கு வாங்கியவை) அடைக்கவேண்டியும் வருபவர்களே.
வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் காரணிகளாக நீண்ட வேலை நேரம், சமையல் மற்றும் வீட்டு வேலை என்பது நம் நாட்டில் உள்ளது போல் அல்ல என்ற அறியாமை, பாலியல் தொல்லைகள், நேரத்திற்கு உணவும் உறக்கமும் இல்லாமல் வரும் சிரமங்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கடுமையான சூழலில் இருக்க நேருபவர்கள் பெரும்பான்மையோர் எவ்வாறு இங்கு வேலைக்கு வந்தார்கள் என்று பார்த்தால் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் முகவர்கள் மூலமே. ஆகையால், உண்மையான நிலையை அறியாமல் குறைந்த சம்பளத்தில் அவதிப்படும் நிலை.
இது ஒருபுறம் இருக்க மனிதகடத்தல் பற்றிய விழிப்புணர்வும் அவசியம். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், எதியோபியா போன்ற ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பலர் சமூக-பொருளாதார காரணங்களால் பெண்களும் ஆண்களும் அமீரகம் போன்ற அரபு நாடுகளுக்கு வேலைக்கு விருப்பமுடன் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு சில விஷமிகள் இவர்களை வேலைக்கு அழைப்பது போல் அழைத்து பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், வீட்டு வேலை செய்யவும், இங்கு இருந்து மற்ற நாடுகளுக்கு அவர்களை கட்டாயமாக அழைத்து செல்வதும் நடக்கின்றன. இதுபோன்று வருபவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதை இவ்வாறு பலியானவர்கள் கூறியதில் இருந்து அறியலாம். இவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவை எல்லாம் இவர்களை இங்கு அழைத்து வந்தவர்களிடமே வைத்திருப்பர். வெளிதொடர்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வர். 
அதேபோல் ஆண்களை வெகு குறைந்த சம்பளத்தில் கட்டிட வேலை அல்லது ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர், அவர்களிடம் சொந்த நாட்டிலேயே வெளிநாட்டு வேலை என்று கூறி கூடுதல் பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு சேர்த்துவிட்டு தாங்கள் பணம் பார்க்கும் அவலங்கள் நடக்கின்றன. இதனால் தான் பல ஆண்கள் வேறு வேலைக்கு அழைத்து வந்து ஒட்டகம் மேய்க்கும் நிலையும், சரியான சம்பளம் இல்லாமல் அடிமைபோல் கடின உழைப்பை எதிர்கொள்வதைப் பற்றி பகிர்வதை அறியலாம். பலர் இல்லாத கம்பெனி பெயரை கூறி வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அறிவித்து இவ்வாறு மனித கடத்தலில் ஈடுபடுத்த வைக்கின்றனர்.  
இதுவே அங்கீகரித்து செயல்படும் முகவர்கள் (recruitment agencies) மூலம் வந்தால் பிரச்னையை சட்டப்படி அணுக முடியும். அதற்கடுத்து மிகவும் முக்கியமானது பலர் இங்கு வேலைக்கு வரும்பொழுது கையொப்பமிடும் ஒப்பந்தத்தில் என்ன கூறியுள்ளது என்று அறிந்துகொண்டு பின்னர் கையொப்பம் இடவேண்டும். அந்த ஒப்பந்தமே இங்கு செல்லுபடியாகும். அதில் சம்பளம், சம்பளம் கூடிய விடுப்பு மற்றும் மற்ற சலுகைகள், அந்த ஒப்பந்தத்தின் காலாவதி தன்மை போன்ற விவரங்கள் இருக்கும். அதேபோல் விசா கிடைத்து விட்டது என்று அறிந்த பிறகு அவை வேலைக்கான விசாவா அல்லது விசிட் விசாவா என்று அறிந்துக்கொள்ளவும்.
இங்கு ஒருவரை வீட்டு வேலைக்கு அழைக்க வேண்டும் என்றால் அவ்வேலைக்கு அழைப்பவர்களே விசா செலவும், அடிப்படை சம்பளம், ஹெல்த் இன்சூரன்ஸ், ஊருக்கு செல்லவேண்டிய விமான கட்டணம், சம்பளம் கூடிய விடுப்பு போன்றவை கட்டாயம் தரவேண்டும். இவை எல்லாம் சம்பந்தபட்ட இருதரப்பும் ஏற்றுகொண்டு ஒப்பந்ததில் கையெழுத்து இடுவர். ஆகையால் இவ்வாறு வரும் பணிப்பெண்களுக்கு பிரச்சனை வருவது அறிது, அவ்வாறு ஏதேனும் நேரிடினும் சட்டப்படி தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக இருக்கும்.
இங்குள்ள அரசும் மனிதகடத்தலை தடுக்கும் வண்ணம் பல ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளை எடுக்கிறது. அதையும் மீறி அறியாமையால் மனிதகடத்தலின் இலக்காகாமல் இருப்பது முக்கியம்.
இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இங்கு வேலைக்கு வருபர்கள் இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தயார்படுத்தப் பட்டு வருகின்றனர். அவர்களின் அரசாங்கமே அதற்கான பயிற்சியை அளிக்கிறது. அப்பயிற்சியில் முக்கியமாக இங்குள்ள கலாச்சாரம், அடிப்படை அரபி மொழி / கலாச்சாரம், மற்றும் அவ்வேலைக்கான அடிப்படை திறமைகளை மேம்படுத்தி அனுப்பிவைக்கிறது. இதன் பலனாக இங்குள்ள சட்டதிட்டங்கள், செய்யக்கூடியவை, கூடாதவை பற்றிய புரிதலுடன் வருகின்றனர்.
நம் இந்திய அரசின் அயல்நாட்டு வெளியுரவு துறையில் பதிவு செய்யப்பட்ட முகவர்களை அறிய வேண்டி இணையத்தில் வளம் வந்ததில் ஒன்றை அறிந்தேன்....அதில் தினப்படி மாற்றங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்ட http://poeonline.gov.in/ செயல்படவே இல்லை. ஒருமுறை அல்ல பல நாட்கள் முயன்றதின் பின்னரே வருத்ததுடன் தெரிவிக்கிறேன் http://moia.gov.in/services.aspx?ID1=123&id=m8&idp=120&mainid=73 என்ற தளத்தில் இத்துறையின் மற்ற விவரங்கள் உள்ளன. பயன்பெறுமா என்று நீங்களே வளம் வந்து தெரிந்துகொள்ளவும். இதுமட்டுமல்லாமல் நம் இந்தியன் எம்பசி மற்றும் கன்சுலேட் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பி ஏமாறவேண்டாம். இந்நிலையில் எப்படி இத்தகவலை பெறுவது என்று யோசிக்க வேண்டும். ஒரே வழி கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தமிழ் நாட்டின் e-சர்வீஸ் மையத்தில் கேட்கத்தொடங்குவோம்.
பிலிப்பைன்ஸ் போன்ற ஒருசில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அடிப்படை சம்பளத்தை உறுதி செய்துள்ளதால் அந்நாட்டு தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர். அதுபோல் நம் அரசும் குறைந்த பட்ச சம்பள நிர்ணயம் செய்தால் மிக குறைந்த சம்பளத்திற்கு வந்து அவதிபடுவது குறையும். 
ECR (வீட்டுவேலை மற்றும் கட்டிட தொழிலாளர்கள் போன்றவர்கள்) கொண்டுள்ள பாஸ்போர்ட் உள்ள தொழிலாளர்கள் மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா (MGPSY) என்ற பென்ஷன் மற்றும் லைப் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொண்டு பயன் பெறவும். மேலும் விவரங்களுக்கு - http://moia.gov.in/writereaddata/pdf/Tamil%20Flyer.pdf  
ஆகவே, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் சட்டவிரோத மையங்கள், மற்றும் தனி நபர்களை நம்பி வருவது பின்னாளில் வேதனைக்கு இட்டுச்செல்லும். வரும்முன் இங்குள்ள உண்மை நிலவரம், சாதக பாதகத்தன்மை எல்லாம் கணக்கில் கொண்டு முடிவெடுக்கவும். அதுமட்டுமின்றி இங்கு அவசர நிலையில் யாரை எவ்வாறு தொடர்பு கொள்ளவேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம். சட்டப்படி வந்தால்தான் நன்மை என்பதை நினைவில் இருத்தவும்.
தூதரக ஒப்புதலோடு வருவோம் போலி முகவர்களை தவிர்ப்போம்...இதுவே கண்ணீர் சாட்சியாகாமல் இருக்க ஒரே வழி.
 
 
நன்றி
ராணி வாராந்தரி 
 

Tuesday, January 5, 2016

பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்.. சாட்டையை கையில் எடுங்கள்!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (05/1/2016 Issue)

 
பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்
சாட்டையை கையில் எடுங்கள்!
-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
அடுத்த கல்வியாண்டுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல கல்விக்கூடத்தில் சேர்க்க இப்பொழுதே  பெற்றோர்கள் படையெடுக்கும் நேரமிது. நம் நாட்டில் பள்ளிகூடங்களுக்கு பஞ்சமில்லை. கல்விக்கூடம் என்ற தொழில் சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் கவர்ச்சிகரமான தொழில் என்றாகி போனது நம் சமூகத்திற்கு சாபமே. கல்வி, ஆரோக்கியம் போன்றவை அரசிடம் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைப்பட்ட காலத்தில் நாம் உணர்ந்திருப்போம், இதில் நாம் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.
இந்நேரத்தில் பெற்றோர் ஆகிய நாம் முதலில் பள்ளியின் அங்கீகாரத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கடந்த ஆண்டுகளின் தகவல்களை ஆராய்ந்தால் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. இந்நிலை இன்றும் தொடர்கிறது. ஆகவே நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். நம் அறியாமையை மற்றவர்கள் முதலெடுப்பதை தடுப்போம்.
பல்வேறு கல்வி முறைகள் சமசீர் கல்வி, மெட்ரிக்குலேஷன், CBSE, ICSE என்று பள்ளிகள் செயல்படுகிறது. மெட்ரிக்குலேஷன் போன்றவை எல்லாம் சமசீர் கல்விமுறையின் கீழ் கொண்டுவந்தாலும் இன்றும் அவை மெட்ரிகுலேஷன் என்ற அடையாளத்துடன் செயல்படுவதை காணலாம். மக்களுக்கு தெளிவான வழிக்காட்டுதல் கிடைப்பதில் சிக்கல் உள்ளதை ஏற்றுகொள்ளவேண்டியுள்ளது. இச்சிக்கலுக்கு முக்கிய காரணம் பல கல்விக்கூடங்கள் அரசியல்வாதிகளிடமும், அரசியல் செல்வாக்குள்ள செல்வந்தர்களிடமும் உள்ளதை மறுக்க முடியாது.  
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் உணர்திருப்பர். அந்த நம்பிக்கையில் இணையத்தில் வேண்டிய விவரத்தை அறியலாம் என்று முயன்றதில்
http://www.tn.gov.in/schooleducation/ ; http://tnmatricschools.com/ ; http://cbseaff.nic.in/cbse_aff/schdir_Report/userview.aspx ; http://www.cisce.org/Locate.aspx  என்றவை தேடுதலில் கிடைத்தது. இதைக்கொண்டு பள்ளியின் அங்கீகாரத்தை அறியமுடியும், அறியமுடியவேண்டும்...
CBSE, ICSE என்ற தளங்களில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும்  கல்விக்கூடத்தின் அங்கீகாரத்தை பற்றி அறிவது கடினம் என்பதை தேடிப்பார்த்தால் உணர்ந்துக்கொள்ளலாம்.
அகவே, மேற்கூறிய வகையில் பள்ளியின் நிலை என்ன என்பதை அறிய முடியும், அப்படி முடியாத நிலையில் நம் அரசாங்கம் அறிவித்துள்ள ஈ-சேவை மையங்களை நாடி அங்கீகார எண் கேட்கதொடங்கினால் இப்போழுது நாம் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பதை சம்பந்தபட்ட துரை அதிகாரிகள் தெரிந்துகொள்ள நேரிடும்.
அடுத்தது நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது பள்ளிகள் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதா என்பதே. அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில எப்படி நம் பிள்ளைகள் விளையாடும், கற்றுகொள்ளும் என்பதை யோசிக்க வேண்டும். விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், போதுமான கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் கொண்ட ஆரோகியமான சூழல் அவசியம்.
பின்னர் பிள்ளைகள், ஆசிரியர் விகிதாசாரம் பற்றியும் யோசிக்க வேண்டும். கூடுதல் பிள்ளைகளுக்கு ஒரே ஆசிரியர் எப்படி கவனம் செலுத்தி படிப்பிக்க முடியும். இங்கு ஆசிரியர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா என்று கவனம் கொள்ளவேண்டும். அதுவும் ஆரம்ப நிலை மற்றும் நர்சரி பள்ளிகள் பயிற்சி பெறாத நபர்களைகொண்டு நடப்பது சகஜம்.
ஒவ்வொரு பள்ளியிலும் பாலியல் தொல்லை மற்றும் அடாவடித்தனத்தை (bullyism) எதிர்கொள்ள செயல்படும் குழு உண்டாக வேண்டும். ஆகவே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பொறுபேற்க வேண்டிய அவசியம் நேரிடும். பல பள்ளிகளில் பெயரளவில் இவ்வாறு ஒன்று செயல்படாமல் உள்ளது. அந்த அமைப்பில் பெற்றோர் பிதிநிதிகளும் இருப்பது அவசியம்.
இந்நிலையில் பெற்றோகளாகிய நாம் என்ன செய்யலாம் என்று பாப்போம். வலைத்தளத்தில் தங்களின் அங்கீகார எண் தெரிவித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் விண்ணப்ப படிவம் வாங்கும் பொது அங்கீகார தகவல்களை கேட்பது தவறில்லை, அது நம் உரிமை, பணம் செலுத்தி படிக்க வைப்பவர்கள் நாம் என்பதை நினைவில் நிறுத்தவும். இப்படி கேட்கும் ஓரிருவரை பள்ளி நிர்வாகம் உதாசீனப்படுத்தலாம், ஆனால் ஒவ்வொருவரும் கேட்கதொடங்கினால் பதில் கூறவேண்டிய நிலைக்கு தள்ளபடுவர்.
பல பிரபல தனியார் பள்ளிகள் பெற்றோரை துச்சமாக மதிக்கும் போக்கும் நிலவுகிறது. பெற்றோர்  சிந்திக்க வேண்டும், இவர்கள் எப்படி நம் பிள்ளைகளுக்கு நல்லது செய்வர், மற்றவரை மதிக்க வேண்டிய பண்பை இவர்களைப் பார்த்து பிள்ளைகள் படித்தால் அது எப்படி இருக்கும்? பிள்ளைகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள்? இன்றைய அவலநிலையில் பள்ளி வளாகத்திலேயே பிள்ளைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவதும், பள்ளி பேருந்து வாகனமே பிஞ்சு பிள்ளைகளுக்கு எமனாக இருப்பதைப்பதை பற்றி கேள்வி எழுந்தால் அதற்கும் தங்களுக்கோ தங்கள் பள்ளிகளுக்கோ பொறுப்பில்லை என்று தப்பிக்கும் மனப்பான்மை கொண்ட நிர்வாகமே ஏராளம். எங்கும் விதிவிலக்குகள் உண்டு..அவை இங்கும் சிறந்த கல்விக்கூடங்களாக பொறுப்புடன் செயல்படுவதை காணலாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை இதுபோன்ற தனியார் பள்ளிகளில் சேர்த்தால்தான் அவர்களுக்கு வருமானம், இல்லையேல்? ஆகவே மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே போதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இன்றைய காலத்தில் அரசு சில மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியம். பள்ளிகள் அடிப்படை வசதிகள் உடையதாக இருக்கவேண்டும், அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு சொந்தமான வலைதளமும், அங்கு பள்ளியின் அங்கீகார எண், ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்விக் கட்டணம், நூலகம், மற்ற அடிப்படை வசதிகள் என்ன என்பதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆகவே, தவறான தகவல்களை தர முடியாது, அது பின்னர் சட்டப் பிரச்சனைக்கு கொண்டு செல்லும். அதேபோல் விண்ணப்ப படிவங்களில் அங்கீகார எண் மற்றும் அதன் காலாவதி காலம், நிரந்தனமானதா அல்லது குறிப்பிட்ட காலத்தில் புதிப்பிக்க வேண்டியதா (வாலிடிட்டி) என்பதையும் கட்டாயம் அறிவிக்கவேண்டும் என்று கொண்டுவரலாம்.
சில CBSE பள்ளிகள் தங்களில் வலைத்தளத்தில் மேற்கூறிய தகவல்களை தெளிவாக தெரிவித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலே பல அடிப்படை விஷயங்களை சரியாகிவிடும்.
இதையெல்லாம் மீறி பல விஷயங்கள் உள்ளன. கல்வி என்பது என்ன என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெறும் பாடங்களை படித்து பெரும் மதிபெண்ணிலா அல்லது அறிவை, திறமையை கூர்தீட்டி சமூக சிந்தனையுள்ள எதிர்கால பிரஜைகளை உருவாக்குவதிலா?
நமக்கு எது தேவை என்ற தெளிவு வேண்டும், அதை நடைமுறை படுத்த எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் நாம் பங்குபெறுவதும் அவசியம். நம் கடமையை சரிவர செய்வோம், ஒன்றுபட்ட மக்களின் குரலுக்கு சக்தி உண்டு என்பதை எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றத்தில் காண்போம் என்ற நம்பிகையில்......  
நன்றி
ராணி வாராந்தரி 

Tuesday, December 15, 2015

சர்ச்சையை மீறிய ... லெக்கிங்க்ஸ் அக்கறை!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (22/11/2015 Issue)

சர்ச்சையை மீறிய ... லெக்கிங்க்ஸ் அக்கறை!

-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்



லெக்கிங்க்ஸ் மற்றும் டைட் ஜீன்ஸ், ஜெக்கிங்க்ஸ் போன்றவை ஆபாசமா அல்லது தேவையா போன்ற சர்ச்சைகள் ஒரு பக்கம் போய்கொண்டு இருந்தாலும், எந்த உடையையும் ஆபாசமாகவோ, ஆபாசமின்றியோ அணியலாம். இக்கேள்வி எப்பொழுது எதற்கு மக்களின் மனதில் எழுந்தது என்று பார்த்தால் நம் நாட்டில் நடக்கும் பல பாலியல் வன்புணர்ச்சிக்கும் பெண்களின் உடையே காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் உடை மட்டுமே காரணம் என்று ஏற்றுக்கொள்ள முடியாததற்குக் காரணம் சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை கற்பழிக்கப்பட்ட சம்பவங்களைக் கூறலாம். ஆக, நம் சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களின் பெண்களைப்பற்றிய கண்ணோட்டம் மாறவேண்டும். இதற்கு நம் குடும்ப அமைப்பும் கல்விக்கூடங்களும் முக்கிய பங்காற்றவேண்டும்.

இவையெல்லாம் போகட்டும், இங்கு இறுக்கமான உடை எவ்வாறெல்லாம் நம் உடல்நலத்தைப் பாதிக்கிறது என்று பார்க்கவேண்டியது பெண்களாகிய நம் அவசியம்.

இறுக்கமாக டைட் ஜீன்ஸ் போன்றவை தொடர்ந்து அணியும் பொழுது பெண்கள்   இனப்பெருக்கம் தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பல மருத்துவர்களும், ஆய்வுகளும் தெரியப்படுத்துகின்றன. அதுவும் நீண்ட நாட்கள் தொடர்ந்து அணிவதால் இப்பாதிப்பு நிச்சயம் என்கின்றனர். இவ்வாறு உடை அணியும் பொழுது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் மாற்றமும் ஈஸ்ட் தொற்றும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

இன்னும் முடியவில்லை...  இடுப்பெலும்பு முதல் தொடைவரை இவ்வுடை தரும் அழுத்தத்தால் உணர்வற்ற / திமிர்ப்பு நிலை ஏற்படுகின்றது. சமீபத்தில் 35 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்ததற்குக் காரணம் அப்பெண் அணிந்திருந்த ஜெக்கின்ஸ் பின்னங்காலில் (calves) தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக்  குறைத்ததால் தசைபகுதி வீக்கத்தையும், இவ்வீகத்தின் அழுத்தம் காரணமாக அடுத்துசெல்லும் நரம்புகளையும் பாதித்து.
 
கால்களையும், இனப்பெருக்கத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடிவயிற்றை அழுத்துவதால் அஜீரணம், மற்றும் அது தொடர்பான நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை ஏற்படும் என்று பல மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆகவே ஆரோக்கியத்தை மீறிய அழகு அவசியமா என்று சுயமாக சிந்தித்துச் செயல்படவும். 

நன்றி
ராணி வாராந்தரி