Thursday, February 18, 2016

போலிகளை நம்பாதீர்! கண்ணீரில் மிதக்காதீர்!!

ராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (21/2/2016 Issue)
 
 
 
 
 
 
வெளிநாட்டுப் பயணம்
   போலிகளை நம்பாதீர்!
கண்ணீரில் மிதக்காதீர்!!
-    விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் செல்பவர்கள் இல்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டூம். அரபு நாடுகளில் வீட்டுவேலை மற்றும் கட்டிட தொழிலாளர் போன்ற அடிமட்ட வேலைக்கு சென்றேனும் தங்கள் குடும்பத்தை காக்கவேண்டிய சமூக பொருளாதார சூழல் உள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சமீபத்தில் வீட்டு வேலைக்கு என்று சென்ற கஸ்தூரி என்பவர் சவுதி அரேபியாவில் இருந்து வந்த நிலையை எல்லோரும் அறியலாம். இது ஒரு கஸ்தூரியை பற்றியது அல்ல.. நம் கவனத்திற்கு வராத பலாயிரம் ஆண், பெண் என்ற பேதமின்றி கஸ்தூரி போல் கனவு மெய்படாமல் இனி கனவே கனவாகி போன நிலையில் திரும்பி வந்தவர்கள் பற்றியது. ஏன் இந்த நிலை? இதை களைய என்ன செய்ய வேண்டும் என்ற அலசலில் ஓர் பார்வை...... 
முதலில் நாம் இவர்களின் நிலையை பார்த்தால் பெரும்பான்மை வீட்டு வேலைக்கு என்று வருபவர்கள் காலை முதல் இரவு வரை பணிசெய்ய வேண்டியுள்ளது. அதேபோல் கட்டிட தொழிலாளர்களாக வரும் ஆண்களும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையை பற்றி முன்பே அறிந்து வருபவர்களும் அறியாமல் வருபவர்களும் ஏராளம். பெரும்பான்மையாக இவர்கள் தங்கள் குடும்பத்தைக் காக்கவும், நம் நாட்டில் வாங்கிய கடனை (அதிக வட்டிக்கு வாங்கியவை) அடைக்கவேண்டியும் வருபவர்களே.
வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் காரணிகளாக நீண்ட வேலை நேரம், சமையல் மற்றும் வீட்டு வேலை என்பது நம் நாட்டில் உள்ளது போல் அல்ல என்ற அறியாமை, பாலியல் தொல்லைகள், நேரத்திற்கு உணவும் உறக்கமும் இல்லாமல் வரும் சிரமங்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கடுமையான சூழலில் இருக்க நேருபவர்கள் பெரும்பான்மையோர் எவ்வாறு இங்கு வேலைக்கு வந்தார்கள் என்று பார்த்தால் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் முகவர்கள் மூலமே. ஆகையால், உண்மையான நிலையை அறியாமல் குறைந்த சம்பளத்தில் அவதிப்படும் நிலை.
இது ஒருபுறம் இருக்க மனிதகடத்தல் பற்றிய விழிப்புணர்வும் அவசியம். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், எதியோபியா போன்ற ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பலர் சமூக-பொருளாதார காரணங்களால் பெண்களும் ஆண்களும் அமீரகம் போன்ற அரபு நாடுகளுக்கு வேலைக்கு விருப்பமுடன் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு சில விஷமிகள் இவர்களை வேலைக்கு அழைப்பது போல் அழைத்து பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், வீட்டு வேலை செய்யவும், இங்கு இருந்து மற்ற நாடுகளுக்கு அவர்களை கட்டாயமாக அழைத்து செல்வதும் நடக்கின்றன. இதுபோன்று வருபவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதை இவ்வாறு பலியானவர்கள் கூறியதில் இருந்து அறியலாம். இவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவை எல்லாம் இவர்களை இங்கு அழைத்து வந்தவர்களிடமே வைத்திருப்பர். வெளிதொடர்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வர். 
அதேபோல் ஆண்களை வெகு குறைந்த சம்பளத்தில் கட்டிட வேலை அல்லது ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர், அவர்களிடம் சொந்த நாட்டிலேயே வெளிநாட்டு வேலை என்று கூறி கூடுதல் பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு சேர்த்துவிட்டு தாங்கள் பணம் பார்க்கும் அவலங்கள் நடக்கின்றன. இதனால் தான் பல ஆண்கள் வேறு வேலைக்கு அழைத்து வந்து ஒட்டகம் மேய்க்கும் நிலையும், சரியான சம்பளம் இல்லாமல் அடிமைபோல் கடின உழைப்பை எதிர்கொள்வதைப் பற்றி பகிர்வதை அறியலாம். பலர் இல்லாத கம்பெனி பெயரை கூறி வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அறிவித்து இவ்வாறு மனித கடத்தலில் ஈடுபடுத்த வைக்கின்றனர்.  
இதுவே அங்கீகரித்து செயல்படும் முகவர்கள் (recruitment agencies) மூலம் வந்தால் பிரச்னையை சட்டப்படி அணுக முடியும். அதற்கடுத்து மிகவும் முக்கியமானது பலர் இங்கு வேலைக்கு வரும்பொழுது கையொப்பமிடும் ஒப்பந்தத்தில் என்ன கூறியுள்ளது என்று அறிந்துகொண்டு பின்னர் கையொப்பம் இடவேண்டும். அந்த ஒப்பந்தமே இங்கு செல்லுபடியாகும். அதில் சம்பளம், சம்பளம் கூடிய விடுப்பு மற்றும் மற்ற சலுகைகள், அந்த ஒப்பந்தத்தின் காலாவதி தன்மை போன்ற விவரங்கள் இருக்கும். அதேபோல் விசா கிடைத்து விட்டது என்று அறிந்த பிறகு அவை வேலைக்கான விசாவா அல்லது விசிட் விசாவா என்று அறிந்துக்கொள்ளவும்.
இங்கு ஒருவரை வீட்டு வேலைக்கு அழைக்க வேண்டும் என்றால் அவ்வேலைக்கு அழைப்பவர்களே விசா செலவும், அடிப்படை சம்பளம், ஹெல்த் இன்சூரன்ஸ், ஊருக்கு செல்லவேண்டிய விமான கட்டணம், சம்பளம் கூடிய விடுப்பு போன்றவை கட்டாயம் தரவேண்டும். இவை எல்லாம் சம்பந்தபட்ட இருதரப்பும் ஏற்றுகொண்டு ஒப்பந்ததில் கையெழுத்து இடுவர். ஆகையால் இவ்வாறு வரும் பணிப்பெண்களுக்கு பிரச்சனை வருவது அறிது, அவ்வாறு ஏதேனும் நேரிடினும் சட்டப்படி தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக இருக்கும்.
இங்குள்ள அரசும் மனிதகடத்தலை தடுக்கும் வண்ணம் பல ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளை எடுக்கிறது. அதையும் மீறி அறியாமையால் மனிதகடத்தலின் இலக்காகாமல் இருப்பது முக்கியம்.
இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இங்கு வேலைக்கு வருபர்கள் இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தயார்படுத்தப் பட்டு வருகின்றனர். அவர்களின் அரசாங்கமே அதற்கான பயிற்சியை அளிக்கிறது. அப்பயிற்சியில் முக்கியமாக இங்குள்ள கலாச்சாரம், அடிப்படை அரபி மொழி / கலாச்சாரம், மற்றும் அவ்வேலைக்கான அடிப்படை திறமைகளை மேம்படுத்தி அனுப்பிவைக்கிறது. இதன் பலனாக இங்குள்ள சட்டதிட்டங்கள், செய்யக்கூடியவை, கூடாதவை பற்றிய புரிதலுடன் வருகின்றனர்.
நம் இந்திய அரசின் அயல்நாட்டு வெளியுரவு துறையில் பதிவு செய்யப்பட்ட முகவர்களை அறிய வேண்டி இணையத்தில் வளம் வந்ததில் ஒன்றை அறிந்தேன்....அதில் தினப்படி மாற்றங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்ட http://poeonline.gov.in/ செயல்படவே இல்லை. ஒருமுறை அல்ல பல நாட்கள் முயன்றதின் பின்னரே வருத்ததுடன் தெரிவிக்கிறேன் http://moia.gov.in/services.aspx?ID1=123&id=m8&idp=120&mainid=73 என்ற தளத்தில் இத்துறையின் மற்ற விவரங்கள் உள்ளன. பயன்பெறுமா என்று நீங்களே வளம் வந்து தெரிந்துகொள்ளவும். இதுமட்டுமல்லாமல் நம் இந்தியன் எம்பசி மற்றும் கன்சுலேட் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பி ஏமாறவேண்டாம். இந்நிலையில் எப்படி இத்தகவலை பெறுவது என்று யோசிக்க வேண்டும். ஒரே வழி கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தமிழ் நாட்டின் e-சர்வீஸ் மையத்தில் கேட்கத்தொடங்குவோம்.
பிலிப்பைன்ஸ் போன்ற ஒருசில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அடிப்படை சம்பளத்தை உறுதி செய்துள்ளதால் அந்நாட்டு தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர். அதுபோல் நம் அரசும் குறைந்த பட்ச சம்பள நிர்ணயம் செய்தால் மிக குறைந்த சம்பளத்திற்கு வந்து அவதிபடுவது குறையும். 
ECR (வீட்டுவேலை மற்றும் கட்டிட தொழிலாளர்கள் போன்றவர்கள்) கொண்டுள்ள பாஸ்போர்ட் உள்ள தொழிலாளர்கள் மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா (MGPSY) என்ற பென்ஷன் மற்றும் லைப் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொண்டு பயன் பெறவும். மேலும் விவரங்களுக்கு - http://moia.gov.in/writereaddata/pdf/Tamil%20Flyer.pdf  
ஆகவே, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் சட்டவிரோத மையங்கள், மற்றும் தனி நபர்களை நம்பி வருவது பின்னாளில் வேதனைக்கு இட்டுச்செல்லும். வரும்முன் இங்குள்ள உண்மை நிலவரம், சாதக பாதகத்தன்மை எல்லாம் கணக்கில் கொண்டு முடிவெடுக்கவும். அதுமட்டுமின்றி இங்கு அவசர நிலையில் யாரை எவ்வாறு தொடர்பு கொள்ளவேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம். சட்டப்படி வந்தால்தான் நன்மை என்பதை நினைவில் இருத்தவும்.
தூதரக ஒப்புதலோடு வருவோம் போலி முகவர்களை தவிர்ப்போம்...இதுவே கண்ணீர் சாட்சியாகாமல் இருக்க ஒரே வழி.
 
 
நன்றி
ராணி வாராந்தரி 
 

2 comments:

  1. மிகவும் அருமையான முறையில் அரபு நாடுக்களுக்கு வரும் மக்களின் துன்பம் அவற்றை எப்படி அணுகினால் எவ்வாறு களையலா, வருவதற்கு முன்பு எவ்வாறு ஒபந்தத்தை முழுவதும் படித்து பின் கையப்பம் இடவேண்டும். எந்த நாடுகளில் இவை நடக்கின்றன என்பது போன்ற பல தகவல்கள் மற்றும் இணையதள முகவரி தந்து அணுக வேண்டிய வழி முறைகளையும் கூறியுளீர்.

    மொத்தத்தில் மிக பயனுள்ள கட்டுரை அரபு மற்றும் வெளிநாட்டிற்கு வரும் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஷோபா,

      பயனுள்ளதாக தெரிவித்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete